Tuesday, February 3, 2009

இணையத்தில் அதிகரித்து வரும் பிஷ்ஷிங் தொல்லை!

இணையத்தில் எத்தனையோ நன்மைகள் இருப்பது போல சில தொல்லைகளும் இருந்து தான் வருகிறது. குறிப்பாக, நம் வங்கி கணக்கை குறி வைக்கும் கில்லாடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை என்ன செய்வது?இணையத்தில் பொருட்கள் வாங்கும் போதும் அல்லது பில் கட்டணங்களைச் செலுத்தவும் நாம் உபயோகிக்கும் கணக்கு விபரங்கள் எந்த நேரத்திலும் பிறர் கையில் அகப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது போன்ற தொல்லைகளில் வங்கிகளில் பங்களிப்பு என்ன என்றால் பூஜ்ஜியமே! அதாவது, வங்கி கணக்குவிபர திருட்டுக்கள் பெருமளவில் நம் கவனக் குறைவினாலேயே நடக்கிறது. இவற்றில் எள்ளளவிற்கும் வங்கிகள் பொறுப்பு ஏற்பதில்லை என்பதால் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். வங்கி கணக்கு விபரங்களைத் திருடும் கில்லாடிகள் கையாளும் வழிகளில் ஒன்று தான் `பிஷ்ஷிங்' (Phishing)!போலி இணைத்தளங்கள் மூலம் தகவல்களைத் திருடும் முறை தான் பிஷ்ஷிங் எனப்படுகிறது. தற்போது இது போன்ற போலி இணையத்தளங்களும் அதிகரித்து வருகின்றன.உதாரணமாக, கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் இது போன்ற 215 நிகழ்வுகள் ஏற்பட்டு இருப்பது நம்மை அதிர்ச்சி அடைய செய்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 180 சதவீதம் அதிகம்.இந்திய கணினியியல் அவசர உதவி குழு (The Indian Computer Emergency Response Team) கடந்த ஆண்டில் 335 போலி இணையத்தளங்களைக் கண்டறிந்து அழித்துள்ளது. இதில் பெரும்பான்மையாக ஈ-காமர்ஸ் துறை சார்ந்தவை. அதற்கடுத்து நிதியியல் சேவை துறையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூடிஐ போன்ற சில வங்கிகளின் இணையத்தளங்களும் போலியாக சிலராக உருவாக்கப்பட்டு உலாவ விட்டிருப்பது கண்டறியப்பட்டு கலையப்பட்டது.பிஷ்ஷிங் தொல்லைகளுக்கு முடிவு காண்பது ஒருபக்கம் இருந்தாலும், இதில் நாம் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?நமக்கு வரும் மின்னஞ்சல்கள் தான் நமக்கு போடப்படும் முதல் தூண்டில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இணைய முகவரியை அனுப்பி அதில் சென்று தகவல்களைப் பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டால் அவற்றை மிக எச்சரிக்கையாக படித்து பார்க்க வேண்டும். ஏன்என்றால், பெரும்பாலும் வங்கிகள் வாடிக்கையாளர் விபரங்களை மின்னஞ்சலில் கேட்டுப் பெறுவதில்லை.மேலும், வங்கி கணக்கை இணையத்தில் கையாளும் போது முகவரி பட்டையில் உள்ள இணைய முகவரியைச் சரி பார்த்த பிறகே கணக்குகளைக் கையாள வேண்டும். குறிப்பாக, மிக நீளமான இணைய முகவரிகள் வரும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பிஷ்ஷிங் தொல்லையைக் தவிர்க்க அரசின் இணைய குற்றவியல் பிரிவு பல வழிகளில் செயல்பட்டு வருகிறது என்றாலும், இதில் நாமும் விழிப்புடன் இருப்பது அவசியம் தானே! கடந்த ஆண்டு நடந்த இணைய குற்றங்களில் 62 சதவீதம் பிஷ்ஷிங் சார்ந்தவை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

No comments: