Tuesday, February 3, 2009

தமிழ் லினக்ஸ்(Linux): மக்களுக்கான கணி

தமிழ் லினக்ஸ்(Linux): மக்களுக்கான கணி உலகம்தழுவிய இயக்கமாகவே மாறிவிட்டிருக்கும் லினக்ஸ் இயக்குதளம் (கணியை இயக்க உதவும் மென்பொருள்) முழுக்கவும் தமிழ் வடிவில் உருவாகிவந்திருக்கிறது. தமிழ் லினக்ஸ் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் வெங்கட்ரமணன். தமிழ் லினக்ஸ் பற்றிப் பொதுவாக எழும் கேள்விகளுக்கு அவர் இங்கே பதில் எழுதுகிறார். தமிழ் லினக்ஸ் யாருக்காக? தமிழ் லினக்ஸ் தமிழ் தெரிந்த, கணினியைப் பயன்படுத்தும், கணியைப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்காகவும்தான். ஆங்கிலம் தெரிந்தால்தான் கணியைப் பயன்படுத்த முடியும் என்றிருக்கும் நிலையை மாற்றித் தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் கணிப் பயனைப் பெற உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம்.தமிழில் கணியைப் பயன்படுத்துவதால் என்ன ஆதாயங்கள்? தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் இன்றைக்கு ஓரளவுக்கு ஆங்கில உதவியின்றிக் கணியைத் தமிழில் பயன்படுத்த முடிகிறது. தமிழில் கணி அமைந்தால் மட்டுமே கிராம சுகாதாரம், அடிப் படைக் கல்வி, ஊராட்சி நிர்வாகம் போன்ற முக்கியத் துறைகளில் நமக்குக் கணியின் பயன்பாடுகள் கிடைக்கும்.உதாரணமாக, தமிழில் கணியில் ஒரு எளிய செயலியை வடிவமைப்பதன் மூலம் கிராம சுகாதார நிலையங்களில் உள்ளூர்வாசிகளின் உடல்நலம் குறித்த விவரங்களைச் சேமிக்க முடியும். இந்த நிலையில் சராசரி கிராமத்தவரின் முந்தைய நோய் வரலாறுகள், மருந்துகளில் அவருக்கிருக்கும் ஒவ்வாமை போன்ற முக்கியத் தகவல்களைத் திரட்ட முடியும்.இவற்றுக்கான கருவிகளை ஏதோ ஒரு அமெரிக்க நிறுவனம் உருவாக்கித் தரும் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது இழிவானது. திறந்த ஆணைமூலங்களின் (open source code) அடிப்படையிலான தமிழ் லினக்ஸ் இத்தகைய கருவிகளை வடிவமைத்துக்கொள்ள நமக்கு உதவுகிறது.தமிழ் லினக்ஸில் என்னென்ன மென்பொருள்கள் இருக்கின்றன? இதை வைத்துக்கொண்டு என்னென்ன செய்ய முடியும்? லினக்ûஸ நிறுவும்பொழுது வீட்டிலோ சின்ன அலுவலகத்திலோ என்னவெல்லாம் செய்வார்களோ அதற்கான நிரலிகள் (software) எல்லாம் முற்றிலும் இலவசமாகக் கூடவே வந்துவிடுகின்றன. இணையத்தில் உலாவ, மின்னஞ்சல் அனுப்ப, படங்களைப் பார்க்க, பாட்டு கேட்க என்று எல்லா விதமான நிரலிகளும் தமிழிலேயே கிடைக்கும். விண்டோஸ் இயக்குதளத்தில் நீங்கள் படங்களைக் கொண்ட பயனர் இடைமுகத்தின் (user interface) மூலம் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் லினக்ஸிலும் அதைப் போலவே செய்ய முடியும். கிட்டத்தட்ட வடிவமைப்பில் இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கடந்த ஐந்து வருடங்களில் லினக்ஸ் பயன் எளிமையில் நிறைய கவனம் செலுத்தி அற்புதமாக முன்னேறியிருக்கிறது.தமிழ் லினக்ஸை எங்கே பெறுவது? எப்படி நிறுவிக் கொள்வது? தமிழுக்காகத் தனியே ‘தமிழ் லினக்ஸ்’ என்று எதுவும் வெளியிடப்படுவதில்லை. ஓரளவு முதிர்ந்த நிலையில் இப்பொழுது தமிழ், லினக்ஸின் பொது வடிவங்களிலேயே இணைக்கப்பட்டுவிட்டது. ரெட் ஹாட் ஃபெடோரா (Fedora Core), நாவெல் சுஸி லினக்ஸ் (Suse Linux), டீபியன் (Debian), மாண்ட்ரிவா (Mandriva), உபுன்டு (Ubuntu) என்ற பெயர்களில் வெளியாகும் - இலவசமாகக் கிடைக்கும் - எந்த லினக்ஸ் பொதியை வேண்டுமானாலும் இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம். சில சமயங்களில் கணி சஞ்சிகைகளுடன் இவற்றில் ஒன்றை இலவசமாகக் கொடுக்கிறார்கள்.இதை நிறுவும்பொழுது தமிழ் தேவை என்று தெரிவு செய்தாலே போதுமானது. நிறுவி முடிந்தவுடன் தேவையான தமிழ் எழுத்துருக்கள், இடை முகம் எல்லாம் தயாராக இருக்கும். எனவே இதை முயற்சித்துப் பார்ப்பது மிகவும் எளிது. தமிழில் சிக்கல்கள் இருந்தால் உடனடியாக எளிதில் ஆங்கிலத்திற்கு மாறிக் கணியை இயக்கவும் முடியும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்கு தளத்தைப் பயன்படுத்துபவர்கள் அதைக் கலைக்காமலே கணினியில் லினக்ஸையும் கூடவே நிறுவிக்கொள்ள முடியும். இதற்கு இரட்டைத் துவக்குமுறை (dual booting) என்று பெயர். அப்படி நிறுவினால் கணியைத் துவக்கும்பொழுது விண்டோஸ் வேண்டுமா, லினக்ஸ்என்று தெரிவு செய்ய முடியும். இந்த முறை எளிதாக லினக்ஸைச் சோதித்துப் பார்க்க உதவுகிறது.தமிழ் லினக்ûஸ யார் பயன்படுத்துகிறார்கள்? இதுவரை ஓரளவு கணினியில் நல்ல பரிச்சயமுள்ளவர்கள், மாணவர்கள் போன்றவர்கள்தான் தமிழ் லினக்ûஸப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மற்றவர்களால் முடியாது என்று பொருளல்ல. இது இன்னும் வெளியில் தெரியவேயில்லை. இதை முன்னெடுத்துச் செல்ல அமைப்பு ரீதியான சில உதவிகள் தேவை. உதாரணமாக, பள்ளிகள், இணைய உலாவி மையங்கள் போன்றவையும் புதிதாகக் கணினி கோர்த்து விற்பவர்களும் இதைக் கையாண்டால்தான் இது பிரபலமாகும்.தமிழ் லினக்ஸை உருவாக்குவதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன? இதிலிருக்கும் அடிப்படைப் பயன்பாடு குறித்த தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் பல சமாளிக்கப்பட்டுவிட்டன. 1999 வாக்கில் இதை நாங்கள் துவங்கியபொழுது ஒன்றுமே கிடையாது. முன்மாதிரிக்குப் பிற இந்திய மொழிகளில்கூடக் கிடையாது. அந்த நிலையில் தமிழை உள்ளிடுவது, ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழ் இணை கண்டுபிடிப்பது போன்றவை எங்கள் முன்னிருந்த பெரிய சவால்கள். ஆனால் ஆர்வமும் திறமையும் கொண்ட நண்பர்கள் உதவியில் இவை வெகுவாகவே சமாளிக்கப்பட்டுவிட்டன.ஆனால் மறுபுறத்தில் இதைப் பயன்படுத்தப் பயனர்களைத் தயார்ப்படுத்தல், உதவிக் கட்டுரைகள் எழுதுதல், கணித் தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுதல், அண்டை அயலில் பயன்படுத்துபவர்களுக்கு ஆங்காங்கே உதவி மையங்களை அமைத்தல் போன்ற இரண்டாம் நிலைச் செயல்பாடுகள்தான் இப்பொழுது எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள். இதற்குத் தமிழகம், இலங்கை போன்ற இடங்களிலிருந்து எமக்கு உதவி தேவை. குறிப்பாகக் கல்வி மையங்கள் இதை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.எத்தனை பேர் ஈடுபட்டிருக்கிறீர்கள்? எப்படிப்பட்டவர்கள் தமிழ் லினக்ஸ் திட்டத்தில் இருக்கிறார்கள்? இந்தத் திட்டங்கள் 1999 வாக்கில் எங்களில் நான்கு ஐந்து பேர்களால் ஆங்காங்கே துவக்கப்பட்டன. பிறகு 2000இல் பத்துக்கும் குறைவான நாங்கள் ஒன்று சேர்ந்து செயல்படத் துவங்கினோம். இவர்களில் துரையப்பா வசீகரன், தினேஷ் நடராஜா, சிவராஜ், சிவக்குமார் சண்முக சுந்தரம் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். எங்களில் பலர் இந்தியாவிற்கு வெளியே அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் வசித்திருந்தோம். ஆரம்பக் கட்டத்திலிருந்தே மிகச் சிக்கலான தொழில்நுட்பப் பிரச்சினைகளத் தீர்த்ததில் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. இதில் இரண்டு பிரிவினர் உண்டு: ஒன்று கணி நுட்பத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு, பன்னாட்டுக் கணி நிறுவனங்களில் வேலை செய்தவர்கள்; மற்றொரு பிரிவினர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள். இதில் கணித் துறைக்கு வெளியே இருக்கும் என் போன்ற ஆர்வலர்களும் அடக்கம்.இவர்களைத் தவிர இன்னும் பல நண்பர்களும் அவ்வப்பொழுது இடையில் வந்து சில தீர்வுகளுக்கு உதவுகின்றனர். லினக்ஸிற்கு மட்டுமல்லாமல் பொதுவில் பயன்படக்கூடிய மோஸிலா ஃபயர் ஃபாக்ஸ், ஓப்பன் ஆபீஸ் போன்ற திறந்த மூலங்களைத் தமிழ்ப்படுத்தும் ‘தமிழா’ அமைப்பை நண்பர் முகுந்தராஜ் முன்னின்று நடத்துகிறார். இந்தக் குழுவில் பலர் கட்டுக்கோப்பாக முறையான வழித் திட்டங்களுடன் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். தமிழ் லினக்ûஸப் பயன்படுத்த உதவும் ஆவணங்கள் இருக்கின்றனவா? இவற்றைத் தயாரிப்பதில் எப்படிப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள்? இது உண்மையிலேயே சோகமான விஷயம். இன்றைக்கு “இதோ தமிழ் லினக்ஸ், நீங்கள் எல்லாவற்றையும் தமிழிலேயே செய்யலாம்” என்று மிகத் தைரியமாக நாங்கள் சொல்ல முடியாமல் இருக்க முக்கியக் காரணம், இதைப் பயன்படுத்தத் தேவையான உதவிக் கட்டுரைகள் இன்னும் தமிழில் தயாரிக்கப்படவில்லை.இதைப் போக்குவதற்காக 2001ஆம் ஆண்டில் நான் “Tamil Linux Howto” என்றொரு ஆவணத்தைத் தயாரித்தேன். இதில் எழுத்துருக்கள், தட்டச்சுப் பலகை, தமிழ் இடைமுகம் இவற்றை எப்படி நிறுவுவது என்பதற்கான உதவிகள் இருக்கின்றன. ஆனால் இன்றளவும் முழுக்க முழுக்கத் தமிழில் ஓர் ஆவணம் இல்லை. இதற்கு நிறைய மாணவர்களின் உதவி தேவைப்படுகிறது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் திறந்த மூல, தளையறு மென் பொருள்களுக்கான ஒரு மையம் துவங்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு ஆராய்ச்சி/கல்வி அமைப்பு இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லை. அந்த மையத்தினர் இதை முக்கியப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.தமிழ் லினக்ûஸப் பிரபலப்படுத்த என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன? என்னாலான அளவில் நான் ஏழு வருடங்களாக இதைச் செய்துவருகிறேன். முதன்முதலாக லினக்ஸ், தளையறு மென்பொருள் இவற்றைப் பற்றிய அறிமுகம் தரும் தொடர் கட்டுரைகளைத் திண்ணை இணைய தளத்தில் நான் எழுதினேன். பின்னர் ஒவ்வொரு முறை தமிழ் லினக்ஸில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வரும்பொழுதும் நான் ஊடகங்களில் இதைப் பற்றி எழுதிவருகிறேன். எனது திண்ணைக் கட்டுரைகளையும் தொலைக்காட்சி செயல்விளக்கத்தையும் கண்டு சிலருக்கு இதில் ஆர்வம் வந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.இருந்தபோதும் தமிழ்நாட்டின் பெரு ஊடகங்களை அணுகியபோதெல்லாம் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.திறந்த ஆணைமூல (Open Source) இயக்கம் என்பது என்ன? கணினியில் செயýகளை வெளியிடும்பொழுதும் அவற்றின் ஆணைமூலங்களையும் (source code) வெளியிட வேண்டும் என்பதே திறந்த மூல வழிமுறையின் கொள்கை. தொடர்ச்சியான நுட்ப வளர்ச்சிக்கு இது முக்கியம் என்று இந்த வழிமுறைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் கருதுகிறார்கள். மென்பொருள்களைத் தயாரிப்பு ரீதியான பொருள்களாகப் பார்க்காமல் அறிவுரீதியான பொருளாகப் பார்க்க வேண்டும் என்பது திறந்த மூலத்தின் கொள்கை.பெரும் நிறுவனங்கள் தங்கள் நிரல்களைப் பூட்டப்பட்ட நிலைக்கு மாற்றித் தங்கள் வர்த்தகத்திற்கு நியாயமற்ற முறையில் ஆதாயம் தேடிக் கொள்கின்றன. இதற்கு மாற்றாக உருவானதே திறந்த மூல அமைப்பு.தளையறு மென்பொருள் (Free Software) இயக்கம் என்பது என்ன? ஆங்கிலத்தில் Free Software movement என்று அறியப்படுவதில் இருக்கும் Free என்பதற்கு இலவசம் என்று பொருளில்லை. இலவசமாகக் கணி நிரலிகளைத் தரும் அமைப்பு அல்ல. ஊழ்ங்ங் என்பதைக் கட்டுப்பாடுகளற்ற என்ற பொருளில்தான் தளையறு மென்பொருள் என்று மொழிபெயர்த்தேன். பொதுவில் கணினி நிரல்களில் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு எதிரானது இந்த அமைப்பு.இதன் ஆதாரக் கொள்கைகள்:1. நிரலியை எந்த விதமாகவும் இயக்கிக்கொள்ளலாம், இதை எந்தப் பயனுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.2. நிரலி எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் உரிமை வேண்டும், அதை உங்களுக்கு வேண்டியபடி மாற்றியமைத்துக்கொள்ளும் உரிமையும் வசதியும் வேண்டும் (நிரலைத் திறந்த மூலமாக்குவது இந்த வசதியைத் தருகிறது).3. நிரலை மறுவிநியோகம் செய்யும் உரிமை. 4. நிரலில் நீங்கள் செய்யும் முன்னேற்றங்களைப் பொதுவில் சமுதாயத்திற்கு அளிக்கும் உரிமை.தமிழ் லினக்ஸின் பல வெளியீடுகள் இதே உரிமைகளுடன்தான் வெளியாகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் முக்கியம்.தமிழ்க் கணி நிறுவனங்கள் தமிழ் லினக்ஸிற்குப் பங்களிக்கின்றனவா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், தமிழ் மென்பொருள் நிறுவனங்களில் இதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை. இதன் காரணமாகவே இந்த நிறுவனங்கள் தங்கள் உழைப்பைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்குத் தயங்குகின்றன. தங்கள் தனிப்பட்ட பங்களிப்பை முறையான தளையறு மென்பொருள் உரிமத்துடன் வெளியிடுவதன் மூலம் அதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற முடியும் என்பதை அவர்கள் அறிவதில்லை.தளையறு மென்பொருள் அல்லது திறந்த மூலம் பற்றி ஆர்வமுள்ள தமிழ்க் கணி நிறுவனங்கள் தமிழ் லினக்ஸ் குழுவைத் தொடர்புகொண்டால் இயன்ற உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறோம்.தமிழ் லினக்ஸ் இயக்கம் தொடர்பான இணைய முகவரிகள்: www.thamizhlinux.org, www.thamizha.org

1 comment:

V.BALA MURUGAN said...

லினக்ஸ் இலவச மென்பொருள் தானே.

இதனை சில புத்தகங்களுடன் வெளியிட வேண்டும்

எனக்கேட்டுக்கொள்கிறேன்.

என்னிடம் லின்க்ஸ் இயக்குதள வண்தட்டு இல்லை.

இதனை பெறும் வழிமுறைகளை தமிழில்

firemechbalamurugan@gmail.com

க்கு தயவு செய்து அனுப்பவும்