கேனான் வழங்கும் பவர்ஷாட் A630: ஒரு பார்வைபுகைப்படம் எடுக்கும் ஆர்வலர்கள் மற்றும் தொழில்ரீதியாகப் புகைப்படம் எடுப்பவர்கள் என புகைப்படக் கருவி உபயோகிப்பாளரை இருவகையாகப் பிரித்தால், இருதரப்பினருக்கும் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய கேமிராக்கள் சந்தையில் கிடைப்பது மிகவும் அரிதே. ஆனால் இதற்கு விதிவிலக்காக, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேனானின் பவர்ஷாட் A630 அமைந்திருக்கிறது. சுமார் 250 கிராம் எடையுள்ள, 4 AA அளவிலான மின்கலங்களை உபயோகிக்கும் இந்த கேமிரா, 8 மெகாபிக்சல் அளவிலான படங்கள் எடுக்கும் திறன் பெற்றதாகும். இதிலுள்ள 4x ஜூம் வசதியைப் பயன்படுத்தும் போது, கேமிராவின் காட்சித் துல்லியம் (Sharpness) தானாகவே மாறுபடும் வகையில் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். லென்ஸ் எதை நோக்கி பொறுத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டவும், காட்சி எல்லையை தீர்மானிக்கவும் சிறிய கட்டம் தென்படும் என்பதால், குழுவினரைப் படம் எடுக்கும் போது யாரும் விடுபடாமல் எச்சரிக்கையாக எடுக்க பவர்ஷாட் A630 -யில் வசதி உள்ளதாக இத்தயாரிப்பு தொடர்பான கேனானின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் பவர்ஷாட் A630 சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள கேனான், தனது தயாரிப்புக்களை இந்தியச் சந்தையில் மேலும் விரைவுபடுத்தும் நடவடிக்கையாக இம்மாத தொடக்கத்தில் கோவாவில் தனது வினியோகஸ்தர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தது.இக்கூட்டத்தில் பேசிய கேனான் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு சந்தைப்படுத்துதல் (Product Marketing) பிரிவின் மேலாளர் ரச்னா தத்தா கூறும் போது, "எங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக எங்கள் வினியோக குழுக்களின் ஒத்துழைப்பையேக் கருதுகிறோம். அவர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவுமே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார். டிஜிட்டல் இமேஜிங் துறையில் சர்வதேச அளவில் முன்னனியில் திகழும் கேனான், கடந்த ஆண்டு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் விற்பனை 100 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சிங்கப்பூரில் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புக்களால் விற்பனை 1.04 பில்லியன் டாலர் அதிகரித்திருப்பதாகவும், அதற்கு முந்தைய ஆண்டை விட இது 115 சதவீதம் உயர்வாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த இரண்டு வருடங்களில் தனது விற்பனையை மேலும் இரண்டு மடங்காக உயர்த்தி, வரும் 2008 -ஆம் ஆண்டிற்குள் 3.4 பில்லியன் டாலர் என்ற விற்பனை இலக்கை எட்ட கேனான் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக டிஜிட்டல் கேமிராக்கள் மட்டுமின்றி காப்பியர்கள், பேக்ஸ் இயந்திரங்கள் மற்றும் ஸ்கேனர்கள் ஆகியவற்றின் விற்பனையைச் சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிடி கேம்கார்டெர் DC22 மாடலின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டமொன்றை அறிவித்துள்ள கேனான், இத்திட்டம் 01 டிசம்பர், 2006 முதல் மாத இறுதி வரை நடப்பில் இருக்கும் என்றும் இதில் பங்கெடுக்க விரும்புபவர்கள்
www.flykingfisher.com/Canon என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்றும் தனது அறிவிப்பில் தெரிவிக்கிறது.